தூர நோக்கு

தெற்காசியாவிலேயே அதிசிறந்த தன்னியக்க பொறியியல் பயிற்சி நிறுவகமாக உருவாகுதல்.

குறிக்கோள்

இலங்கையின் தன்னியக்க பொறியியல் துறைக்கான அதி சிறந்த பயிற்சி மையமாக தேவையான நியமங்களை நடைமுறைப்படுத்தி, தன்னியக்க பொறியியல் தொழில்நுட்பத்திற்கும் மற்றும் அதனோடு தொடர்புடைய தொழில்களுக்கும் முறையாக அபிவிருத்தியடைந்த தொழில்நுட்பத்தினூடாக, உயர்மட்ட செயலாற்றுகையை அடைந்துகொள்வதற்கு ஏற்றமுறையிலமைந்த நவீன பயிற்சிகளை பயிலுனர்களுக்கு வழங்குதல்.

மேல்நோக்கு

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகமானது தன்னியக்க பொறியியல் மற்றும் அதனோடிணைந்த துறைகளில் திறமை மிக்க தொழில்நுட்பவியலாளர்களை பயிற்றுவிப்பதில் இலங்கையிலேயே மிகவும் பிரபல்யமான நிறுவகமாகும். இலங்கை அரசாங்கத்திற்கும் ஜேர்மன் ஜனநாயக குடியரசிற்க்ககும் இடையே 1958 ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கேற்ப இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தொகுதியினை பராமரிப்பதற்கான பயிற்சியினை வழங்குவதற்காக இந்நிறுவகம் வேரஹெர என்னும் இடத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய வேலைத்தளத்தில் 1959ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிறுவகம் 1974ம் ஆண்டு ​மொரட்டுவைக்கு இடம் மாற்றப்பட்டது. இது 1976 மாசி மாதம் 29ம் திகதி வரை ஜேர்மன் இயக்குனராலும் அவரது ஜேர்மன் உத்தியோகத்தர்களினாலும் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. பின்னர் இந்நிர்வாகம் இலங்கை இயக்குனர்/அதிபர் மற்றும் அவரது உள்ளூர் உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது. இ.ஜே.தொ.ப.நி 2004ம் ஆண்டு வரை போக்குவரத்து அமைச்சின் கீழ் இருந்தது. 2004ம் ஆண்டு இந் நிறுவகம் திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து திறனபிவிருத்தி மற்றும் பகிரங்க தொழில் முயற்சி மீளமைப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. தற்போது இ.ஜே.தொ.ப.நி இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகிண்றது.

பயிற்சியின் தன்மை

தேசிய தொழில் பயிலுனர் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சித் திட்டத்தின் கீழ் பின்வரும் முழு நேர பயிற்சிநெறிகள் நடத்தப்படுகின்றன. பயிற்சிக்காலம் பயிற்சி நெறிக்கு எதிரே காட்டப்பட்டுள்ளது:

மோட்டார் வாகன தொழில் வல்லுனர் 4 வருடங்கள்
வார்ப்பியல் பொருத்துனர் 4 வருடங்கள்
மின்சார தொழில் வல்லுனர் 3½ வருடங்கள்
காற்று சீராக்கலும் குளிர் சாதனமும் தொழில் வல்லுனர் 3½ வருடங்கள்
ஆயுத எந்திர தொழில் வல்லுனர் 3½ வருடங்கள்
டீசல் எந்திர தொழில் வல்லுனர் 3 வருடங்கள்
வாகன மின்சார தொழில் வல்லுனர் 3 வருடங்கள்
காய்ச்சியிணைத்தல் தொழில் வல்லுனர் 3 வருடங்கள்
மோட்டார் வாகன உடல் திருத்தமும் வர்ணம் தீட்டலும் 3 வருடங்கள்

எல்லா பயிற்சி நெறிகளும் 80% வேலைத்தள, ஆய்வுகூட செயற் பயிற்சிகளும் 20% வகுப்பறை பாடங்களையும் கொண்டிருக்கும். எல்லா முழுநேர பயிற்சி நெறிகளினதும் பயிற்சிக்காலம் மூன்றிலிருந்து நான்கு வருடங்களாகும்.

பகுதிநேர பயிற்சி திட்டமானது தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பாடசாலையிலிருந்து விலகியோர்ளுக்கான நிறுவகத்தின் வேலை நேரத்திற்கு பின்னரான ஒரு மேலதிக செயற்பாடாகும். இச்செயற் திட்டத்திற்காக மாலை மற்றும் வாரஇறுதியில் முப்பத்தியிரண்டு குறுந்தவணை பயிற்சிகள் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. இதற்குரிய கட்டணங்கள் பயிலுனர்களிடமிருந்து அறவிடப்படுகின்றது.

விசேட பாடநெறிகள்

இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தினால் செய்முறைத் தேவைகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள பகல்நேர விசேட பயிற்சிப் பாடநெறிகள் நடாத்தப்படுகின்றன. தனியார் துறை மற்றும் அரச துறை சார்ந்த அமைப்புக்கள் அவர்களது தொழில்நுட்ப பணியாட் தொகுதியினை இந்த பாடநெறிகள் மூலம் பயிற்றுவிக்கின்றனர்.

இவ்வாறு எமது நிறுவனத்திடம் இருந்து தொடர்ச்சியாக பயிற்சியினைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களாக இலங்கைத் தரைப்படை, இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, ஸ்ரீலங்கன் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஏசியன் எவியேஷன் சென்டர் தனியார் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்கைலைன் எரோநோட்டிகல் இன்ஜினீரிங் தனியார் நிறுவனம், செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா கம்பனி, வரையறுக்கப்பட்ட லாப் ஹோல்சிங் என்பவற்றினைக் குறிப்பிடலாம்.

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள இங்கு இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு கொள்வதற்கான தகவல்களின் பிரகாரம் பிரதான பயிற்சி பொறியியலாளருடன் தொடர்பு கொள்ளவும்.

மதிப்பீடு செய்தல் மற்றும் இறுதிப்பரீட்சை

பயிற்சி காலம் முடிவடைந்த பின்னர் முழுநேர பாடநெறிகளைப் பயிலும் மாணவர்கள் இறுதித் தொழில்சார் பரீட்சை ஒன்றிலே தோற்றுதல் வேண்டும். மதிப்பீடு மற்றும் பரீட்சைகளை ஒழுங்கு செய்தல் என்பன இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமானது மற்றும் NAITA போன்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுவதுடன் உரிய ஒழுங்குவிதிகளின் பிரகாரம் இந்த இரண்டு நிறுவனங்களும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுக்கின்றன.

பகுதிநேரப் பாடநெறிகளைப் பயிலுவோர் அவர்களது பாடநெறிகளின் இறுதியில் எழுத்து மூல மற்றும் செயல்முறைப் பரீட்சை ஒன்றுக்கு தோற்றுதல் வேண்டும்.